சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.030   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்பராய்துறை - திருக்குறுந்தொகை அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=YohZYGl7318  
கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;-
பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத்
திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.


[ 1]


மூடினார், களியானையின் ஈர் உரி;
பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்;
சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.


[ 2]


பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்;
நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்;
சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்;
இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.


[ 3]


முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர்,
என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்-
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்;
அன்பராய் இருப்பாரை அறிவரே.


[ 4]


போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்,
வாதை தீர்க்க! என்று ஏத்தி, பராய்த்துறைச்
சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!


[ 5]


Go to top
நல்ல நால்மறை ஓதிய நம்பனை,
பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை,
தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை,
வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!


[ 6]


நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை;
பருப்பதம் மதயானை உரித்தவன்,
திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல்
பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.


[ 7]


எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல்
பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்,
விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.


[ 8]


நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;
மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி;
திருப் பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே.


[ 9]


தொண்டு பாடியும், தூ மலர் தூவியும்,
இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்,
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.


[ 10]


Go to top
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்!
பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பராய்துறை
1.135   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு சேர்வது ஒர் மேனியர்,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
5.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song